உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தமிழகத்தில் உயர்கல்வி படிக்க ஏற்பாடு

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தமிழகத்தில் உயர்கல்வி படிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-01 21:20 GMT
சென்னை,

உக்ரைனில், ரஷிய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட பல்வேறு உயர் படிப்புகளை படிக்க சென்ற மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

ரஷியா தொடுத்த போரின் காரணமாக தமிழக மாணவர்கள் தங்கள் படிப்புகளை பாதியிலேயே விட்டுவிட்டு, வரும் துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் படிப்புகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பிய தமிழக மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் படிக்க ஏற்பாடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், ‘உக்ரைனில் படிப்புகளை பாதியிலேயே விட்டுவிட்டு வரும் மாணவர்கள் தமிழகத்தில் உயர் கல்வியை தொடருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

உயர்கல்வியை தொடருவதற்கான சூழல் இருந்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி ஏற்பாடு எடுக்கப்படும். என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆங்காங்கே நிறைய இடங்கள் இருக்கின்றன. அவர்கள் கேட்கும் கல்லூரிகள் கிடைக்காவிட்டாலும், இருக்கின்ற இடங்களில் அவர்களை சேர்த்து கொள்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்