திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ 5 லட்சம் மோசடி பட்டதாரி வாலிபர் மீது வழக்கு
திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி பட்டதாரி வாலிபர் மீது வழக்கு
புதுச்சேரி
திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த பட்டதாரி வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதல்
புதுவை லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் 100 அடி ரோட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்தார். அந்த துணிக்கடையின் முதல் மாடியில் காரைக்கால் பூவம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த தினகரன் (வயது 24) என்பவர் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.
இந்தநிலையில் தினகரனுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் நெருங்கி பழகிவந்ததாக தெரிகிறது. இதற்கிடையே தினகரன் அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டுள்ளார். அவரது பெற்றோரும் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை மோசடி
இதனிடையே தினகரன் கல்விக்கட்டணம் கட்டுவதற்கு, செலவுக்கு என்று ரூ.5 லட்சம் வரை அந்த பெண் கொடுத்துள்ளார். மேலும் தினகரனுக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள செல்போனும் வாங்கி கொடுத்துள்ளார்.
இதனிடையே படிப்பு முடிந்து காரைக்கால் சென்ற தினகரன் தன்னிடம் நம்பிக்கை மோசடி செய்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக அந்த இளம்பெண் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.