மிஸ்டுகால் மூலம் பழக்கம்... பள்ளி மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த மெக்கானிக்
மிஸ்டுகால் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர்,
வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணில் மாணவி தொடர்பு கொண்டார். அப்போது திருவள்ளூர் மாவட்டம் தரைச்சிஊத்துக்கோட்டை பழைய காலனியை சேர்ந்த மெக்கானிக் ஜான்ரோஸ் (வயது 19) என்பவர் பேசினார்.
தவறுதலாக எண் மாற்றி டயல் செய்ததால் மிஸ்டு கால் வந்து விட்டதாக அவர் கூறினார். அதன்பிறகு மாணவியிடம் அடிக்கடி போன் செய்து அவர் பேசத் தொடங்கினார். பலமுறை போனில் தொடர்பு கொண்டு காதல் வலை வீசினார். இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டனர்.
மேலும் ஜான்ரோஸ் வேலூருக்கு அடிக்கடி வந்து மாணவியை சந்தித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாணவி வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். அன்று வேலூருக்கு வந்த ஜான்ரோஸ் ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றுவிட்டார். பள்ளிக்கு சென்ற மகள் வீடு திரும்பாததை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளியில் உடன் படித்த நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் செல்போன் மூலம் விசாரணை நடத்தினர். அதில் வாலிபர் ஜான்ரோஸ் என்பவர் மாணவியுடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஜான்ரோஸ் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது அங்கு மாணவி இருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து மாணவியை மீட்டு வந்தனர். போலீஸ் விசாரணையில் வாலிபர் மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் ஜான்ரோசை போலீசார் கைது செய்தனர்.