ஹலோ எப்.எம்.மில் மகாசிவராத்திரி கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்
ஹலோ எப்.எம்.மில் மகாசிவராத்திரி கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று இரவு 10 மணி முதல் ஒலிபரப்பாகிறது.;
சென்னை,
ஹலோ எப்.எம்.மில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ‘சிவார்ப்பணம்’ என்ற தலைப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை (புதன்கிழமை) காலை 7 மணி வரை மகாசிவராத்திரி கொண்டாட்டம் சிறப்பு தொடர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
அதன்படி, இரவு 10:30 முதல் மறுநாள் அதிகாலை 1:30 மணி வரை, சிறப்பு ஒலிச்சித்திரம் இடம்பெறுகிறது. அதில் சிவபெருமானின் பெருமை சொல்லும் திருவிளையாடல் திரைப்படம் ஒலிபரப்பாகிறது. அதைத்தொடர்ந்து ‘சித்தமெல்லாம் சிவமயம்' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர்கள் சுகி சிவம், முனைவர் கு.ஞானசம்பந்தன், முனைவர் சாரதா நம்பிஆரூரன், தேசமங்கையர்க்கரசி மற்றும் ‘இசையே இறைவன்’ என்ற தலைப்பில் கர்நாடக இசை கலைஞர்கள் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், ஒ.எஸ்.அருண், சிக்கில் குருசரண், காயத்ரி கிரீஷ், மஹதி ஆகியோரும் பங்கேற்று பக்தி பரவசமாக உரையாடுகின்றனர்.
சிறப்பு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, மகா சிவராத்திரியையொட்டி, இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை பக்தி பாடல்கள் ஒலிபரப்பாகிறது.