உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-02-28 21:14 GMT
சென்னை,

தமிழ்நாடு நகர்ப்புற தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகளில், 15 வார்டுகளில் மனுதாரர்களாகி நாங்கள் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம்.

தேவகோட்டை நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு வருகிற 4-ந் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 14 ஓட்டுகள் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால், அ.தி.மு.க. சார்பில் 15 கவுன்சிலர்கள் உள்ளதால், இந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுபவர்கள், தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக வெற்றி பெற உள்ளனர்.

குதிரை பேரம்

ஆனால், இதை கெடுக்கும் விதமாக அ.தி.மு.க. கவுன்சிலர்களை ஆளும் கட்சியினர் பல்வேறு வழிகளில் மிரட்டி வருகின்றனர். வீடுகளுக்கு நேரடியாக வந்து மிரட்டுகின்றனர். பணம் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறுகின்றனர்.

அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்பதால், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை தேவகோட்டை நகராட்சி ஆணையர் தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தள்ளி வைத்தால், ஆளும்கட்சியினர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக குதிரை பேரம் நடைபெறும். எனவே, இந்த தேர்தலை நேர்மையாக நடத்தவும், வருகிற 4-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

வாய்ப்பு இல்லை

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும். உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை என்று விளக்கம் அளித்தார்.

இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வக்கீல், கண்காணிப்பு கேமராவில் பேசுவது (ஆடியோ) பதிவாகாது என்பதால், அவற்றையும் சேர்த்து பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், 15 மனுதாரர்களில் ஒருவர் மீது 2 கவுன்சிலர்களை கடத்தி சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

அமைதியாக தேர்தல்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தலைவர், துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்படலாம் என மனுதாரர்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை. திட்டமிட்டபடி தேர்தல் நடத்தலாம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டதுபோல, மறைமுக தேர்தலிலும் அதை பின்பற்ற வேண்டும். அதேசமயம், மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும். ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் ஐகோர்ட்டு மதுரை கிளையை மனுதாரர்கள் அணுகலாம். வழக்கை முடித்து வைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்