முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்கு தமிழக அரசை கண்டித்து புதுவை அ தி மு க ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டித்து புதுவையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டித்து புதுவையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் அதைக் கண்டித்தும் புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், இணை செயலாளர் அன்பானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின்போது அன்பழகன் பேசியதாவது:-
பொய் வழக்கு
தமிழகத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தி.மு.க. அரசு மக்களை திசை திருப்பும் விதமாக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது. அரசின் அறிவிப்புகள் நிறைவேற்றப்படாததை அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் மக்களிடம் கொண்டு செல்லும்போது அவர்கள் மீது பொய் வழக்கினை தி.மு.க. அரசு போடுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டவர்களை தடுத்து நிறுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய்வழக்குப்போட்டு நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். இது ஆட்சி அதிகாரத்தின் பழிவாங்கும் உச்சகட்ட செயலாகும். ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டால் எதிர்காலத்தில் மக்கள் மன்றத்தில் காணாமல் போய் விடுவார்கள்.
அடக்குமுறை
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இதுபோன்று தி.மு.க.வினரை பழிவாங்கவில்லை. ஆனால் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குப்போட்டு அவர்களை அரசியல் செய்யாமல் முடக்குவதிலேயே தி.மு.க. குறியாக செயல்படுகிறது. இதுபோன்ற பொய் வழக்கு அடக்குமுறையினால் அ.தி.மு.க.வை அழித்துவிட முடியாது.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, துணைத்தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர்கள் பெரியசாமி, அன்பழக உடையார், கருணாநிதி, கணேசன், வி.கே.மூர்த்தி, ஜெயசேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஓம் சக்தி சேகர்
தட்டாஞ்சாவடியில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பேசுகையில், மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 4 தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தொண்டர்களால் வளர்ந்த இயக்கம். அ.தி.மு.க.வை யார் நினைத்தாலும் அசைத்து பார்க்க முடியாது. அ.தி.மு.க.வை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதை தி.மு.க. செய்கிறது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து அதனை செயல்படுத்த முடியாமல் தி.மு.க. அரசு மக்களை திசை திருப்புவதற்காக கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற பூச்சாண்டி வேலைகளை கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆசியோடு மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்றார்.