மகா சிவராத்திரி விழா: வெள்ளியங்கிரி மலையேற பணம் வசூலிக்காததால் பக்தர்கள் மகிழ்ச்சி

மகா சிவராத்திரி விழாவையொட்டி பூண்டி வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை சாமி தரிசனம் செய்ய பணம் வசூலிக்காததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2022-02-28 12:10 GMT
கோவை,

கோவைக்கு மேற்கே தென்கயிலாயம் என அழைக்கப்படும், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்குள்ள, கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள 6 மலைகளை கடந்துச் சென்று, 7வது மலையில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள கிரிமலை ஆண்டவரை தரிசிக்கின்றனர்.

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி, சித்திரை 1 ஆகிய விசேஷ காலங்களில், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கிரிமலை ஆண்டவரை தரிசித்து வருகின்றனர். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக, பக்தர்களுக்கு மலையேற தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதாலும், அரசு சார்பில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தாலும், நாளை மகா சிவராத்திரி என்பதால், இன்று காலை முதலே பூண்டி வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில் அடிவாரத்திலிருந்து மலையேறத் தொடங்கினர். கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மலையேறினர். 

மேலும், கடந்த ஓரிரு நாட்களாக மலையேறும் பக்தர்களிடம் வனத்துறையினர் ரூ.100 பணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, பக்தர்களிடம் பணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, நேற்று காலை மலையேறிய பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்