குமரியில் சிவாலய ஓட்டம் இன்று தொடங்குகிறது..!
குமரி மாவட்டத்தில் ‘கோபாலா... கோவிந்தா...’ பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டம் இன்று தொடங்குகிறது.
சுசீந்திரம்,
குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதில் பக்தர்கள் முன்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கி திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கரநாராயணர் கோவில் ஆகிய 12 சிவாலயங்களில் ஓடி சென்று வழிபடுவார்கள்.
இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ‘கோபாலா.....கோவிந்தா...’ என்ற பக்தி கோஷத்துடன் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.
இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி, பந்தல் மற்றும் ஒளி, ஒலி, ஜெனரேட்டர் வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஆண்டுகளில் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் ஒரு சில பக்தர்கள் குறுக்கு வழியில் செல்லும் வகையில் பள்ளியாடி அருகே உள்ள ரெயில் தண்டவாளம் வழியாக ஓடுவதாக திருக்கோவில் நிர்வாகத்திற்கு பல புகார்கள் வந்தன. இதையடுத்து சிவாலய ஓட்டத்தில் பங்குகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் தவறான வழித்தடங்களில் செல்ல வேண்டாம் என்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் ஞானசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், திருக்கோவில் நிர்வாகத்தின் பெயரை பயன்படுத்தி தனிநபர் யாராவது பண வசூலில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.