முகப்பரு அதிகம் இருந்ததால் மனைவியுடன் வாழ மறுத்த கணவர்.....!
முகப்பரு இருந்ததால் சேர்ந்து வாழ மறுத்து மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 32), சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும் கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அந்த பெண் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் அந்த பெண்ணின் முகத்தில் திடீரென்று முகப்பரு ஏற்பட்டு உள்ளது. எனவே பிச்சைமுத்து அவருடன் சேர்ந்து வாழ மறுத்ததாக தெரிகிறது.
இதற்கிடையே பிச்சைமுத்து தனது மனைவியை ஆபாசமாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து உள்ளார். இதையடுத்து கடந்த 25-ந் தேதி பிச்சைமுத்து தனது செல்போனில் உள்ள மனைவியின் ஆபாச படத்தை காட்டி அவரை அடித்து உதைத்ததுடன், வெளியே சொல்லக் கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.
இதற்கு பிச்சைமுத்துவின் தந்தை செல்லதுரை, தாயார் ஜெயலட்சுமி, சகோதரி மகேஸ்வரி, சகோதரர் முத்துக்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர். இது தவிர பிச்சை முத்து தனது மனைவியின் ஆபாச புகைப்படத்தை குடும்பத்தினர் சிலருக்கும் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
கணவர் தாக்கியதில் காயம் அடைந்த அந்த பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்ததும் அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக அவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிச்சைமுத்துவை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக செல்ல துரை, ஜெயலட்சுமி, மகேஸ்வரி, முத்துக்குமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முகப்பரு இருந்ததால் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்து அவரின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.