453 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

புதுச்சேரியில் 5 வயதுக்குட்பட்ட 84,769 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Update: 2022-02-27 17:55 GMT
புதுச்சேரியில் 5 வயதுக்குட்பட்ட 84,769 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
போலியோ சொட்டு மருந்து 
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று புதுவையில் நடந்தது. இதில் 86 ஆயிரத்து 801 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. 
கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
97.66 சதவீதம்
போலியோ சொட்டு மருந்து வழங்க மாநில எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியக்கோவில், திருக்கனூர், குருமாம்பேட் ஆகிய இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் புதிய பஸ்நிலையம், ரெயில் நிலையம், கடற்கரைசாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
புதுவையில் அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 453 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்காக சுகாதார ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய 876 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. போலியோ சிறப்பு முகாம்களில் மாநிலம் முழுவதும் மொத்தம் 84,769 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இது 97.66 சதவீதம் ஆகும்.

மேலும் செய்திகள்