ஓட்டல் காவலாளியை குத்திக்கொன்று ரூ.17,000 கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூரில் ஓட்டலில் தூங்கிக்கொண்டிருந்த காவலாளியை குத்திக்கொலை செய்துவிட்டு கல்லாப் பெட்டியில் இருந்த 17,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்,
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (60). இவர், ஓசூர் ஆவலபள்ளி பகுதியில் அவரது மகள் செல்வி என்பவரது வீட்டில் வசித்து வந்தார். மேலும், ஓசூர் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை காவலாளியாக வேலை பார்த்து வந்த அவர், இரவு நேரத்தில் ஓட்டலில் தங்கி விடுவார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல், ஹோட்டலுக்கு பணிக்கு வந்த தாமோதரன் இரவு 11 மணிக்கு பணி முடிந்த பின்பு ஓட்டலுக்கு உள்ளே தூங்கினார். அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள், ஓட்டலின் மேற்பகுதியில் உள்ள இரும்பு மேற்கூரையை பிரித்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த கல்லாப்பெட்டியில் திருட முயன்றுள்ளனர். அப்போது விழித்து கொண்ட தாமோதரன் சத்தம் போட்டுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், ஓட்டல் கல்லாப் பெட்டியில் இருந்த 17 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். காலையில் வழக்கம்போல் ஓட்டலை திறந்த ஊழியர்கள் அங்கு காவலாளி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சிடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்,
ஓட்டலுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள், தங்களுக்கு இடையூறாக இருந்த காவலாளியை கொலை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஒசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.