எனது பிறந்தநாளில் ஆடம்பரம் தலைகாட்டிவிடக் கூடாது...!! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அன்புக் கட்டளை
எனது பிறந்தநாளையொட்டி, கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்று தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்புக் கட்டளை விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 69ஆவது பிறந்தநாளை மார்ச் 1ஆம் தேதி கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் எனது பிறந்தநாளையொட்டி, கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்று தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்புக் கட்டளை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்குத் தமிழக மக்கள் இமாலய வெற்றியை , மகத்தான தீர்ப்பினை மனப்பூர்வமாக அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். 6 தேர்தல் களங்களில் அடுத்தடுத்து வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறது திமுக கூட்டணி
வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2-ம் நாள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலையில், மார்ச் 4 அன்று மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. கட்சியின் சார்பில் அறிவிக்கப்படுபவர்களை முழுமையான அளவில் வெற்றி பெறச் செய்யவேண்டும். அதுபோலவே, தோழமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்கள் தந்த மகத்தான வெற்றிக்கு வலு சேர்க்கும் வகையில் அனைவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.
என்னுடைய பிறந்தநாளில் நான் உங்களுக்கு வழங்கும் அன்புப் பரிசாக - நன்றிப் பரிசாக 'உங்களில் ஒருவன்' என்கிற தன் வரலாற்றுப் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடுகிறேன். நாளை (பிப்ரவரி 28) நடைபெறவுள்ள அதன் வெளியீட்டு விழாவில், இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்.பி நூலினை வெளியிடுகிறார். திமுகவின் தேவை இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு இருக்கும் எனக் கழகத்தைத் தொடங்கியபோது அண்ணா சொன்னார். இன்றைய நிலையில், முன்பை விடவும் தேவை அதிகமாகி இருக்கிறது.
சமூகநீதிப் பயணத்தில் தமிழகத்தைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு. நம் பயணம் நீண்டது, நெடியது; அது முடிவதில்லை. எனது பிறந்தநாளையொட்டி, நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்பது என் அன்புக் கட்டளை. மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். கழகத்தில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை எடுத்துரையுங்கள்” என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.