சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் விளையாட்டு வீரருக்கு நரம்பு மாற்று அறுவை சிகிச்சை

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில், விளையாட்டு வீரருக்கு நரம்பு மாற்று அறுவை சிகிச்சை, 4 டாக்டர்கள் குழு தலைமையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-02-27 00:10 GMT
சென்னை,

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் பாலு. இவர் அதே பகுதியில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஆறுமுக கமலேஷ் (வயது 19). அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்றவர். மேலும், தேசிய அளவில் நடந்த பல்வேறு ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளார்.

இந்தநிலையில், கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறுமுக கமலேஷ் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின் குணமடைந்தார். பின்னர் ஒரு மாதம் கழித்து உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அதிக எடையை தூக்கியதால், அவரது கழுத்துப்பகுதியில் இருந்து கைக்கு செல்லும் நரம்புகள் எதிர்பாராதவிதமாக பாதிக்கப்பட்டது.

இதனால் அவர், தனது கைகளை முழுமையாக மேலே தூக்க முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சுமார் 7 மாத காலம் சிகிச்சை பெற்றார். ஆனாலும், அவருக்கு கை சரியாகாததால், அவரது பெற்றோர் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியில் ஆகஸ்டு மாதம் சிகிச்சைக்காக ஆறுமுக கமலேஷை அனுமதித்தனர்.

அங்கு அவரை, கை மற்றும் நுண் அறுவை சிகிச்சை துறை டாக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட டாக்டர்கள் பரிசோதித்தனர். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு, செப்டம்பர் மாதம் டாக்டர்கள் ஸ்ரீதர், கார்த்திகேயன், மகேஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட டாக்டர்கள் குழு அவருக்கு நரம்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இந்தநிலையில், தற்போது பூரணமாக குணமடைந்து ஆறுமுக கமலேஷ் தன்னுடைய ஜிம்னாஸ்டிக் பயிற்சியை மீண்டும் தொடங்கி உள்ளார். இதுகுறித்து டாக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

இவருக்கு கழுத்து பகுதியில் இருந்து கைக்கு செல்லும் 5 நரம்புகளில், 3 நரம்புகள் பாதிக்கப்பட்டதால், அவரது உடலில் இருந்து சில நரம்புகளை எடுத்து, நரம்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளோம். இந்த அறுவை சிகிச்சை 3 மணி நேரம் நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்து 4 மாதங்களாக அவருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது அவர் பூரணமாக குணமடைந்து விட்டார். இன்னும் 6 மாதங்களில் முழுமையாக அவர் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கு பெறலாம். இந்த அறுவை சிகிச்சை முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர்கள் குழுவை ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் அனந்தகுமார் உள்ளிட்ட டாக்டர்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும் செய்திகள்