மருத்துவக்கல்லூரி செயல்பாட்டை ஆர்வத்தோடு பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்
‘பெல்லோ சிட்டிசன்' தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் நீட் தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரியின் செயல்பாட்டை ஆர்வத்தோடு பார்வையிட்டனர். உத்வேகம் அளிக்கும் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சக மனிதர்களின் மேன்மைக்காக சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ‘பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு, சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், 3-ம் ஆண்டு மருத்துவப்படிப்பு படித்து வரும் மாணவரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் ‘பெல்லோ சிட்டிசன்' தொண்டு நிறுவனம் மூலம் அடையாளம் காணப்பட்டார். அவர் மருத்துவப்படிப்புகளுக்கு தயாராகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அதுதொடர்பான திட்டங்கள், செயலாக்கங்களை ‘பெல்லோ சிட்டிசன்' தொண்டு நிறுவனத்திடம் கூறி, உதவிகளை பெற்று வருகிறார். அதன்படி, அவர் தற்போது அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான அனைத்து விதமான பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், மருத்துவப்படிப்பில் சேர ஆர்வமுள்ள அந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மேலும் உயிரூட்டும் வகையில், மருத்துவப்படிப்பு காலங்களில் என்னென்ன மாதிரியான பாடத்திட்டங்கள் படிக்க வேண்டும்?, மருத்துவ உபகரணங்களை எப்படி கையாள்வார்கள்? மருத்துவக்கல்வி வகுப்புகள் எப்படி நடக்கும்? அதில் எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும்? என்பது தொடர்பான செயல் விளக்கங்களை மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச்சென்று எடுத்துக்கூறும் நிகழ்வை புதிய முயற்சியாக மேற்கொண்டிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அவர், தான் படித்து வரும் சென்னையை அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள தாகூர் மருத்துவக்கல்லூரியில், கல்லூரி நிர்வாகத்தோடு இணைந்து செய்திருந்தார்.
சென்னை, மதுரை, விருதுநகர், சிவகாசி, வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்து வரும் சுமார் 110 மாணவ-மாணவிகள் அழைத்து வரப்பட்டனர். அந்த மாணவ-மாணவிகளுக்கு, தாகூர் மருத்துவக்கல்லூரியின் டீன் டாக்டர் குமுதா லிங்கராஜ், துணை முதல்வர் டாக்டர் கோபாலன் ஆகியோர் சேவை துறையான மருத்துவ துறையை தேர்ந்தெடுக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்கான வாய்ப்புகள் குறித்தும் உத்வேகம் அளிக்கும் வகையில் ஊக்கம் தரும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
தாகூர் மருத்துவக்கல்லூரியின் கருத்தரங்கு அறையில், அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சைகள் குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆற்றுப்படை அறக்கட்டளையின் இணை நிறுவனர் பெர்சி மேரி வர்கீஸ், நிர்வாகிகள் கீர்த்திவட்சன், ஹேமந்த் மற்றும் சாய்ரம்யாதர்ஷினி ஆகியோர், தாகூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களோடு இணைந்து உடற்கூறு இயல், உடற்கூறு இயல் அருங்காட்சியகம், அவசர சிகிச்சை பிரிவு, மயக்க மருந்தியல் உள்ளிட்ட துறைகளுக்கு மாணவ-மாணவிகளை குழுக்களாக பிரித்து அழைத்துச் சென்றனர்.
அங்கு பேராசிரியர்கள் துறை சார்ந்த அம்சங்களை மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினார்கள். அவர்களும் இதனை ஆர்வத்தோடு கேட்டறிந்தனர். ‘பெல்லோ சிட்டிசன்' உதவியோடு ஆற்றுப்படை அறக்கட்டளை மற்றும் தாகூர் மருத்துவக்கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்திருந்த மருத்துவக்கல்லூரியை பார்வையிடும் நிகழ்ச்சி நீட் தேர்வு எழுத உள்ள தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்ததாகவும், நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டராக வேண்டும் என்ற தங்களுடைய கனவுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அமைந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.