உக்ரைனில் பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் திருக்கோவிலூர் மாணவர்கள் - உளுந்தூர்பேட்டை மாணவியையும் உடனடியாக மீட்குமாறு கண்ணீர்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் மாணவர்களை மீட்டுதரக்கோரி அவர்களுடைய பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-02-26 23:42 GMT
உக்ரைனில் பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் திருக்கோவிலூர் மாணவர்கள் - உளுந்தூர்பேட்டை மாணவியையும் உடனடியாக மீட்குமாறு கண்ணீர்
கள்ளக்குறிச்சி,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் வேலை நிமித்தமாக அங்கு சென்று தங்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள் தற்போது நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டுக்கு தமிழகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பல்லாவாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை-விமலா தம்பதியரின் மகள் நந்தினி (வயது 20) உக்ரைன் நாட்டுக்கு சென்று அங்குள்ள கார்கீயூ இன்டர்நேஷனல் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் ஊருக்கு திரும்ப முடியாமல் கார்கீயூ பகுதியில் உள்ள ஒரு விடுதியின் பாதாள அறையில் தமிழ்நாட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் அவர் சிக்கி தவித்து வருகிறார். எனது மகள் இருக்கும் இடத்தின் அருகில் குண்டு, வெடிக்கும் சத்தம் கேட்பதால் அவர் அச்சமடைந்துள்ளார். ஆகவே எனது மகளை மீட்டு தர வேண்டும் என்று கோரி நந்தினியின் தாய் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு எனது மகள் சென்றார். தற்போது அங்கு போர் நடந்துவருவதால் எனது மகள் என்னிடம் செல்போன்மூலம் தொடர்பு கொண்டு, நான் ஒரு கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் தங்கியிருப்பதாக கூறினார். மேலும் உணவு இன்றி தவிப்பதோடு, இன்னும் ஓரிரு நாட்களில் நாங்கள் தங்கியிருக்கும் பகுதியை ரஷியா தாக்கக்கூடும்.

எனவே தன்னை அழைத்து செல்லும் படி கூறினார். ஆகவே உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் எனது மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் திருக்கோவிலூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம்-பாரதி தம்பதியரின் மகன்களான ஹரிஹரசுதன் (22) உக்ரைன் மெக்காலனில் உள்ள பிளாக்கி இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டும், வெங்கட்ரமணன் (20) 2-ம் ஆண்டும் படித்து வருகின்றனர்.

இந்த மாணவர்களும் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். இதுகுறித்து 2 மாணவர்களின் பெற்றோரான ராமலிங்கம்-பாரதி தம்பதியினர் கூறுகையில், எங்களது மகன்கள் உக்ரைன் நாட்டில் உள்ள பதுங்கும் குழியில் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டு மாணவர்களுடன் உணவு, தண்ணீர் இன்றி உயிருக்காக போராடி வருகின்றனர். பதுங்கும் குழியை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அங்கு ஆங்காங்கே வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதாகவும், இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என தெரியவில்லை எனவும் எங்கள் மகன்கள் போன்மூலம் தெரிவித்தனர். எனவே மத்திய, மாநில அரசுகள் எங்கள் பிள்ளைகளை மீட்டு வரவேண்டும். மேலும் அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இங்குள்ள கல்லூரியில் மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்