உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவ-மாணவிகளை மீட்க பெற்றோர் கோரிக்கை
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவ,மாணவிகளை மீட்கக்கோரி பெற்றொர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது போன்று தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் அங்கு சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் பொன்னேரியை சேர்ந்த 2 மாணவிகள் உக்ரைனில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவரது மகள் ரித்திகா மேற்கு உக்ரைனில் மருத்துவம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அவர் அங்கு நடந்து வரும் போர் காரணமாக வெளியேற முடியாமல் சிக்கி உள்ளார். இதேபோல் மீஞ்சூரை அடுத்த நெய்தவாயல் பகுதியை சேர்ந்த மோகன பிரியா என்பவரும் சிக்கி உள்ளார். அவர் கீவ் நகரில் ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
தற்போது கீவ் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் உள்ளே புகுந்துள்ளன. இதனால் அங்கு கடுமையான போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக மோகன பிரியா வெளியேற முடியாமல் அங்கேயே சிக்கி தவித்து வருகிறார்.
இது போன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த ஆதிசிவன் மகன் கபில்நத் மற்றும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் பாண்டியன் மகன் தீபன் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் உக்ரைன் நாட்டிலுள்ள கியூ மற்றும் புஷ்குரோத் பகுதியில் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களும் தாயகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு எங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.