மோட்டார் சைக்கிள் திருடுவது பொழுதுபோக்கு... போலீசாரை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திருடன்

தேனியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தும் போது அவர் திருடிய விதத்தை கவிதை நடை மற்றும் ஆங்கிலத்தில் விவரித்து போலீசாரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Update: 2022-02-24 09:46 GMT
தேனி,

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் பால் வியாபாரி ஒருவர் சாலையோரம் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. இந்நிலையில், பழனிசெட்டிபட்டியில் ஒரு வீட்டில் ஆட்கள் இருந்த போதே அங்கு ஒரு வாலிபர் நுழைந்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து வீட்டில் இருந்தவர்கள் அவரை பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரித்த போது, அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ரெங்கசாமிபட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 31) என்றும், பழனிசெட்டிபட்டியில் பால் வியாபாரியின் மோட்டார் சைக்கிளை திருடியது அவர் தான் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து ராதாகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் கவிதை நடையில் தூய தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசியபடி ஜாலியாக வாக்குமூலம் அளித்தார். அவர் வாக்குமூலம் அளிக்கும் போதே போலீசார் வயிறு குலுங்க சிரித்தனர்.

இந்த வாக்குமூலத்தை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

திறந்து கிடந்த ஒரு வீட்டில் நாய் நுழைந்தது போல நுழைந்தேன். அந்த வீட்டில் விலை உயர்ந்த ஆடம்பரமான மோட்டார் சைக்கிள் சாவியோடு கண்ணாடி மாளிகையில் நின்று கொண்டிருந்தது. அந்த வீட்டுக்குள் போகும்போது ரம்மியமான, அமைதியான காட்சிகள் நிறைந்த ஒரு தோற்றம், ரசனைக்குரிய, சிந்தனைக்குரிய சிற்பிகளின் எழுத்துக்கள் நிறைந்த வாசகங்கள் இருந்தன. மோட்டார் சைக்கிள் சாவியோடு இருந்தது.

அது, ஆசையை தூண்டும் வகையில் தப்பு செய்வதற்கு அவர்கள் வாய்ப்பு கொடுத்திருந்தனர். பயத்திற்கே பயம் காட்டும் அஜித்தைப் போல, அவர் ரசிகனாகிய நான் அந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆண்டிப்பட்டி கணவாயை தாண்டிய பிறகு போலீஸ் சோதனை சாவடி அருகில் செயின் அறுந்து விட்டதன் காரணமாக ஒரு ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மேலும், பிரதமர், முதல்-அமைச்சர், உள்துறை மந்திரி, டி.ஜி.பி. உள்பட பலருக்கு கவிதைகள் எழுதி அனுப்பி உள்ளதாகவும், தான் சமூக பொறுப்புமிக்க நபர் என்றும் கூறி போலீசாரை மேலும் சிரிக்க வைத்தார்.

அவரிடம் போலீசார் விசாரித்த போது, அவர் தேனி, மதுரை மாவட்டங்களில் வீடு, சாலைகளில் சாவியோடு நிற்கும் மோட்டார் சைக்கிளை திருடி ஓட்டுவதும், பெட்ரோல் தீர்ந்து விட்டாலோ, பழுதாகி விட்டாலோ எங்காவது நிறுத்திவிட்டு சென்று விடுவதையும் பொழுதுபோக்காக செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்