முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பதாக சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-02-24 08:09 GMT
சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.
 
இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். 

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இதை  விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பில் ஷெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஜாமின் மனு நகல் போலீஸ் தரப்புக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறினார்.

புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல், ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். இதையடுத்து ஜாமின் மனுவின் நகலை போலீஸ் தரப்புக்கு வழங்க ஜெயக்குமார் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நரேஷ் தரப்பில் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை (வெள்ளிக்கிழமைக்கு) தள்ளி வைத்தார்.

மேலும் செய்திகள்