திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை முதல் முறையாக அலங்கரிக்கும் தி.மு.க....!
திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை முதல் முறையாக தி.மு.க. அலங்கரிக்க போகிறது. புதிய கவுன்சிலர்கள் 2-ந்தேதி பதவி ஏற்கிறார்கள்.
திருச்சி,
திருச்சி நகராட்சியானது, கடந்த 1994-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1996-ம் ஆண்டு முதல் மாநகராட்சி தேர்தல் நடந்தது. முதல் தேர்தலில் மூப்பனார் தலைமையிலான த.மா.கா. வெற்றி பெற்று புனிதவல்லி பழனியாண்டி முதல் பெண் மேயராக அரியணையில் அமர்ந்தார்.
அதுமுதல் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. 2001 மற்றும் 2006 ஆகிய 2 முறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாருபாலா தொண்டைமான் மேயராக பதவி வகித்தார். அவரது மேயர் பதவி காலம் முடியும் முன்பே அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் மேயர் பதவியை சாருபாலா தொண்டைமான் ராஜினாமா செய்தார். 2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயரான சுஜாதா, மேயர் பொறுப்பேற்று 2011-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சி மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நேரடியாக நடந்தது. அப்போது அ.தி.மு.க. 42 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயா மேயராக இருந்து வந்தார். 2016-ம் ஆண்டு வரை, 5 ஆண்டு காலத்திற்கு உள்ளாட்சி அமைப்பு பதவி இருந்தது. அதன்பின்னர் 6 ஆண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் நடக்கவில்லை.
தற்போது நடந்த மாநகராட்சி தேர்தலில் மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மேயர் பதவி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, திருச்சி மாநகராட்சி மேயர் ஆகும் வாய்ப்பு இந்த முறை ஆண்களுக்கு கிட்டும் நிலை உள்ளது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க. மட்டும் 51 வார்டுகளில் போட்டியிட்டு 49 வார்டுகளில் வென்று அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் மாநகராட்சியாக உதயமான 1994-ம் ஆண்டில் இருந்து இதுவரை தி.மு.க. மேயர் பதவி வகிக்க வில்லை. தற்போது முதல் முறையாக தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் மேயராக பதவி ஏற்க இருக்கிறார்.
தற்போது மாநகராட்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 65 பேரும் வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதி பதவி ஏற்கிறார்கள். மார்ச் 4-ந் தேதி மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் கவுன்சிலர்கள் மறைமுக ஓட்டெடுப்பின் மூலம் மேயர், துணை மேயரை தேர்வு செய்கிறார்கள். பெரும்பான்மையான இடங்களை தி.மு.க.வினர் கைப்பற்றியதால் மேயர், துணை மேயர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.