சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 41 ஆண்டு சிறை சென்னை கோர்ட்டு உத்தரவு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்திய வாலிபருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-02-23 21:42 GMT
சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருணா என்ற கருணாகரன் (வயது 23). ஏற்கனவே திருமணமான இவர், கடந்த 2015-ம் ஆண்டு சூளை தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

இதன்பின்பு, தனது சகோதரர் வீட்டில் வைத்து சிறுமியை திருமணம் செய்து கொண்ட அவர், அயனாவரத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். அப்போது சிறுமி மீது சந்தேகம் அடைந்து மது போதையில் அடித்து துன்புறுத்தி உள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை சிகரெட்டால் உடலின் பல்வேறு பகுதிகளில் சூடு வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

41 ஆண்டு சிறை தண்டனை

மேலும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர், கத்தியால் சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு மகளிர் போலீசார் கருணா என்ற கருணாகரன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (போக்சோ) உள்ளிட்ட 6 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கருணா என்ற கருணாகரன் மீதான 6 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு மொத்தம் 41 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

ரூ.7 லட்சம் இழப்பீடு

அதாவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்), கடத்தல் குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டு, கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டு, கத்தியால் அறுத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஓராண்டு, ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி சூடு வைத்த குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு என மொத்தம் 41 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், அனைத்து தண்டனைகளையும் அனுபவித்த பின்பு கடைசியாக ஆயுள் தண்டனையை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்