படகில் 1,700 கி.மீ. பயணம் - வெற்றிகரமாக நிறைவு செய்த பெண் ராணுவ அதிகாரிகள் குழு

சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வரை முதல் முறையாக பாய்மரப்படகில் பயணம் செய்த பெண் ராணுவ அதிகாரிகள் வெற்றிகரமாக மீண்டும் சென்னை திரும்பினர்.

Update: 2022-02-23 09:37 GMT
சென்னை,

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான எலக்டிரானிக் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள எலக்டிரானிக் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயர் படகு சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் பல்வேறு கடல் பகுதிகளில் ராணுவ அதிகாரிகள் படகு மூலம் சவாரி செய்வது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டு புதிய முயற்சியாக பெண் ராணுவ அதிகாரிகள் 10 பேர் சென்னை துறைமுகத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு படகு மூலம் சவாரி மேற்கொண்டனர். இந்த படகு சவாரியில் மேஜர் முக்தா எஸ்.கவுதம் தலைமையில் இந்திய ராணுவத்தில் 7 பெண் மேஜர்களும், 2 கேப்டன்களும் கொண்ட குழுவினர் கடந்த 15 ஆம் தேதி புறப்பட்டனர். 

பெண் ராணுவ அதிகாரிகளின் இந்த படகு சவாரியை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த படகு சவாரி வெறும் விளையாட்டாக இருந்து விடாது, இளம்பெண்கள் ராணுவத்தில் சேர ஒரு ஊக்குவிப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து 1,700 கி.மீ. தொலைவு கொண்ட இந்த படகு பயணத்தை 10 பேர் அடங்கிய பெண் ராணுவ அதிகாரிகள் குழு 8 நாட்களில் வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று காலை சென்னை திரும்பினர். அவர்களுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

மேலும் செய்திகள்