சென்னை மாநகராட்சி தேர்தல்: ஒரு வார்டில் பாஜக வெற்றி
சென்னை மாநகராட்சி தேர்தலில் ஒரு வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. அதேபோல், நகராட்சி, பேரூராட்சி வார்டுகளிலும் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இதுவரை 156 வார்டுகளுக்கு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை திமுக தன்வசமாக்கியது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் உமா ஆனந்த் 5 ஆயிரத்து 539 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற ஒரே வெற்றி இதுவாகும்.