சட்டசபை கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா
புதுவை சட்டமன்ற கூட்டத்தை ஒரு வாரத்துக்கும் மேல் நடத்த வேண்டும், நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றவேண்டும் என்று சபாநாயகரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.
ுதுவை சட்டமன்ற கூட்டத்தை ஒரு வாரத்துக்கும் மேல் நடத்த வேண்டும், நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றவேண்டும் என்று சபாநாயகரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து மனு ஒன்றை வழங்கினார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஒரு வாரத்துக்கு மேல்...
புதுவை சட்டசபை கூடுவதை வரவேற்கிறோம். அதே சமயம் நீட் விலக்கு மசோதா கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற கூட்டத்தொடரை ஒரு வார காலத்துக்கு மேல் நடத்த வேண்டும்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 25-ந்தேதி புதுவைக்கு வந்த பிரதமர் மோடி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெஸ்ட் புதுச்சேரி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதன் மூலம் புதுவை மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்லும் என்றும் அறிவித்தார். பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் சூழ்நிலையில் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து விவாதித்தும் அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்..
நீட் விலக்கு மசோதா
நீட் தேர்வு என்பது அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை கிடையாது. எனவே நீட் தேர்வு விலக்கு மசோதா தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் புதுவை சட்டசபையிலும் இயற்ற வேண்டியது குறித்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.
புதுவைக்கு கடந்த நிதியாண்டில் (2021-22) மத்திய அரசு ரூ.1,729 கோடிதான் நிதி வழங்கியது. வரும் நிதியாண்டிற்கும் அதே தொகையான ரூ.1,729 கோடிதான் வழங்க உள்ளது. ஒரு சதவீத உயர்வுகூட அளிக்கப்படவில்லை. முதல்-அமைச்சர் கோரியபடி ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதியாக 2022-23-ம் நிதியாண்டிற்கு மத்திய அரசு வழங்க இந்த சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.
உள்ளாட்சி தேர்தல்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அனுப்பி மழை சேத பகுதிகளை பார்வையிட்டு சேத மதிப்பீடு செய்த பின்னரும் வழங்கப்படவில்லை.
உள்ளாட்சி தேர்தலில் அட்டவணை இனத்தவர், பழங்குடியினருக்கு முன்பு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு அரசாணை தற்போதைய அரசால் ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்கவேண்டும்.
புதுவை மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கவேண்டும். மேலும் தனியார், நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயம், சட்டமன்ற அறிவிப்புகள் நிறைவேற்றப்படாதது, கடன்சுமை, வேலைவாய்ப்பின்மை, ஆயுஷ்மான் பாரத் திட்டம், மருத்துவ நிதியுதவி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.