தலைமை செயலாளர் இறையன்புவை சந்திக்கிறார் கமல்ஹாசன்..!

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமை செயலாளர் இறையன்புவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-02-21 05:09 GMT
கோப்புப் படம்
சென்னை,

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக சில வாக்குச்சாவடிகளில் புகார் எழுந்தது. இதனால் புகார் கூறப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று, அந்த 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், 'ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன.தங்கள் வாக்கைப் பதிவு செய்யவந்த மாற்றுகட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை. 
உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை துளி விடாமல் உறிஞ்சுவிடத் துடிக்கும் கழகங்களில் ஊழல்வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது. தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும்' என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை 12.30 மணியளவில்  தலைமை செயலாளர் இறையன்புவை தலைமை செயலகத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் எழுந்த முறைகேடுகள் தொடர்பாக புகார் மனு அளிக்க இருக்கிறார்.

மேலும் செய்திகள்