மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது

ஆடம்பர வாழ்க்கை வாழ மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-02-20 18:32 GMT
ஆடம்பர வாழ்க்கை வாழ மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
புதுச்சேரி காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸ்காரர்கள்  சதீஷ் குமார், சிவசங்கர் ஆகியோர் கனகசெட்டிகுளம் எல்லையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே சந்தேகம் அடைந்த போலீசார், 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விழுப்புரத்தை சேர்ந்தவர்கள்
விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம் ஆலப்பாக்கம் மெயின்ரோட்டை சேர்ந்த விக்னேஷ் (வயது 20), திண்டிவனம் ரெட்டணை முருகன் கோவில் தெருவை சேர்ந்த பரத் (20), கடலூர் மாவட்டம் வாழப்பட்டு ஜீவா நகரை சேர்ந்த தீனா என்ற சூர்யா (22) என்பதும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும்   அவர்கள்    புதுச் சேரியில் பல்வேறு இடங்களில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை குறி வைத்து திருடியதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளை திருடி விற்பதை தொழிலாக செய்து வந்துள்ளனர். அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர்.
சிறையில் அடைப்பு
அவர்கள் அளித்த தகவலின்பேரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 14 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்ப் படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்