நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள்: உதயநிதி ஸ்டாலின்
சென்னை ஆழ்வார்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து வாக்களித்தார்.
பின்னர், உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தந்த வெற்றியை விடவும் மிகப்பெரிய வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு நன்றாக இருக்கிறது. கடந்த 9 மாத காலத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இருக்கட்டும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக இருக்கட்டும் அதற்கெல்லாம் தமிழக மக்கள் சரியான அங்கீகாரத்தை உள்ளாட்சி தேர்தலில் கொடுப்பார்கள்.
‘எப்போது அமைச்சர் பதவியை ஏற்க போகிறீர்கள்?, அமைச்சர் பதவி தந்தால் ஏற்பீர்களா?’ என்று கேட்கிறார்கள். நான் அதைப்பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை. முடிவுகளை மு.க.ஸ்டாலின் தான் எடுப்பார். நான் எதையுமே சொல்லமுடியாது. அமைச்சர் போன்ற பதவிகளை எண்ணி எனது பணியை செய்யவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை என்னால் முடிந்த அளவு செய்கிறேன். அவ்வளவு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.