சென்னை மாநகராட்சி தேர்தலில் 43.59 சதவீத வாக்குப்பதிவு
சென்னை மாநகராட்சி தேர்தல் மந்தமாக நடந்துள்ளது. 43.59 சதவீத வாக்குகள் பதிவானது.
200 வார்டுகள் தேர்தல்
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்காக 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பொதுவாக தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்க முடியும். தற்போது சென்னையில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருப்பதால், காலையிலேயே ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலான வாக்காளர்களிடையே காணப்படவில்லை.
இதனால் சென்னையில் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்கள் காலை 8 மணி வரையில் காற்று வாங்கின. வாக்காளர்களை எதிர்பார்த்து தேர்தல் அலுவலர்கள் காத்திருந்ததை காண முடிந்தது.
பனிபொழிவு விலகியதையடுத்து காலை 8 மணிக்கு மேல் வாக்குச்சாவடி மையங்களில் ஓரளவு வாக்காளர்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. சில வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டுப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். கொரோனா தொற்று இன்னும் முற்றிலும் ஒழியாததால், வாக்குச்சாவடிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. வாக்களிக்க வந்த வாக்காளர்கள் கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கையுறை வழங்கப்பட்டது. வாக்காளர்களின் வெப்பநிலையை பரிசோதித்த பின்னர்தான், வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. எனினும் ஒரு சில மையங்களில் உடல் வெப்ப பரிசோதனையை மேற்கொள்ளாமல், வாக்காளர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சிறு சிறு அசம்பாவிதங்கள்
சென்னையில் 1,061 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாகவும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. எனினும் இந்த மையங்களில் எப்போது, என்ன நடக்குமோ? என்ற பதற்றம் காணப்பட்டது.
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் போலீஸ் படையுடன் பதற்றமான வாக்குச்சாவடிகளை அவ்வப்போது கண்காணித்து சென்றபடி இருந்தனர்.
மின்னணு வாக்கு எந்திரம் பழுது, வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லை, பூத் சிலிப் கிடைக்கவில்லை போன்ற பிரச்சினைகள் சில மையங்களில் காணப்பட்டன. கள்ள ஓட்டு போட முயற்சித்தல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் போன்ற பிரச்சினைகளும் எழுந்தன. சில வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையேயும், தி.மு.க.-பா.ஜ.க.வினர் இடையேயும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டன. இதனால் பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு மந்தம்
சென்னையில் மாநகராட்சி தேர்தல் இறுதி வாக்காளர்கள் பட்டியலில் 30 லட்சத்து 49 ஆயிரத்து 529 பெண்களும், 31 லட்சத்து 21 ஆயிரத்து 954 ஆண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 1,629 பேரும் என மொத்தம் 61 லட்சத்து 73 ஆயிரத்து 112 பேர் இடம் பெற்றிருந்தனர். மொத்தம் உள்ள 15 மண்டலங்களை பொறுத்தவரையில் கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 லட்சத்து 66 ஆயிரத்து 771 வாக்காளர்களும், மணலியில் குறைந்தபட்சமாக 98 ஆயிரத்து 387 வாக்காளர்களும் இடம் பெற்றனர்.
200 வார்டுகளை பொறுத்தவரையில் கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட 137-வது வார்டில் அதிகபட்சமாக 59 ஆயிரத்து 212 வாக்காளர்களும், ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட 159-வது வார்டில் குறைந்தபட்சமாக 3 ஆயிரத்து 191 வாக்காளர்களும் இடம் பெற்றனர். எனவே சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என்று அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் நம்பி இருந்தனர். ஆனால் வாக்குப்பதிவு மந்தகதியில் தொடங்கி, மந்தமாகவே சென்றது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி தேர்தலில் எதிர்பார்த்த வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே வாக்காளர்கள் வாக்களிக்க வாருங்கள் என்று மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி பேட்டி மூலம் அழைப்பு விடுத்தும் பலன் கிடைக்கவில்லை.
நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை
காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான 2 மணி நேரத்தில் வெறும் 3.96 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி இருந்தது. காலை 11 மணி நிலவரப்படி 17.88 சதவீதம், மதியம் 1 மணி நிலவரப்படி 23.42 சதவீதம், மதியம் 3 மணி நிலவரப்படி 31.89 சதவீதம் என வாக்குகள் பதிவாகி இருந்தது. மாலை 5 மணி வரை வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். 5 மணி நிலவரப்படி 41.68 சதவீதம் வாக்குகள் பதிவானது. பல வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு மேல் வந்த வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல மையங்களில் மாநகராட்சி ஊழியர்களே வாகன வசதி செய்து கொரோனா நோயாளிகளை அழைத்து வந்தனர். மாலை 6 மணியுடன் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
சென்னை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 43.59 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தல் முடிந்தவுடன் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
வாக்குகள் எண்ணிக்கை 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.