அமெரிக்காவில் இருந்து காஞ்சீபுரம் வந்து ஓட்டு போட்ட ஐ.டி. நிறுவன உரிமையாளர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐ.டி. நிறுவன உரிமையாளர் அமெரிக்காவில் இருந்து காஞ்சீபுரம் வருகை தந்து தனது ஓட்டை போட்டு ஜனநாயக கடமையாற்றினார்.
அமெரிக்காவில் இருந்து வருகை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. காஞ்சீபுரம் மாநகராட்சியில் 50 வார்டுகள் உள்ளது. காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் பகுதியை சேர்ந்தவர் லியாகத் ஷெரீப். இவரது மகன் இம்தியாஸ் ஷெரீப், நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது ஜனநாயக கடமையாற்ற அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் காஞ்சீபுரம் வருகை தந்தார்.
பின்னர், அவர் காஞ்சீபுரம் தாமல்வார் தெருவிலுள்ள புனித சூசையப்பர் ஆரம்பப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.
ஐ.டி. நிறுவன உரிமையாளர்
இந்திய குடிமகனான இவர் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சில் சொந்தமாக ஐ.டி.நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஐ.டி. நிறுவன உரிமையாளரான இம்தியாஸ் ஷெரீப நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே, விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து சொந்த ஊரான காஞ்சீபுரத்திற்கு வந்து வாக்களித்துள்ளார்.
அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என இம்தியாஸ் ஷெரீப் தெரிவித்தார்.