நீச்சல் குளத்தில் தவறி விழுந்த சிறுமி பலி

பந்தை எடுக்க முயன்றபோது, நீச்சல் குளத்தில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தாள்

Update: 2022-02-19 18:27 GMT
பந்தை எடுக்க முயன்றபோது, நீச்சல் குளத்தில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
டிரைவர்
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்தவர் அருணகிரி (வயது 35). இவரது மனைவி ஞானச்செல்வி. இவர்களுக்கு ரூபன் (6) என்ற மகனும், ரூபி (4) என்ற மகளும் இருந்தனர்.
வானூர் அருகே உள்ள பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் அருணகிரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இன்று  அருணகிரி தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தான் வேலை பார்க்கும் வீட்டுக்கு சென்றார். 
குளத்தில் மூழ்கி பலி
பின்னர் குழந்தைகள் 2 பேரையும் பந்து விளையாட விட்டு விட்டு அருணகிரி வெளியே சென்றார். குழந்தைகள் விளையாடியபோது பந்து அங்குள்ள நீச்சல் குளத்தில் விழுந்தது. இதை எடுப்பதற்காக ரூபி முயன்றபோது, குளத்தில் தவறி விழுந்தாள். இதில் அவள் நீரில் மூழ்கினாள். 
இதற்கிடையே வெளியில் சென்று விட்டு சிறிது நேரத்தில் அருணகிரி வீட்டுக்கு வந்தார். பின்னர் குழந்தைகளை தேடியபோது நீச்சல் குளத்தில் ரூபி மூழ்கி கிடப்பதையும், அருகில் ரூபன் நின்று கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக ரூபியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ரூபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்து விளையாடிய போது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்