ஓட்டளிப்பது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட; பா.ஜ.க. தலைவர்
ஓட்டளிப்பது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட என தமிழக பா.ஜ.க. தலைவர் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வளமான, வலிமையான தமிழகத்தை எப்போது பார்க்க போகிறோம் என்று ஏங்கும், தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து, தமிழக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி உருவான பின் தான், தமிழகத்தில் எண்ணற்ற மாற்றங்கள் உருவாகின.
அனைத்து ஏழை பெண்களுக்கும் வங்கி கணக்கு, 8.36 லட்சம் நபர்களுக்கு வீடு, 76 லட்சம் பேருக்கு முத்ரா வங்கி கடன், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்க உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களில், இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகம் பயன் பெற்றது.
தமிழகத்திற்கு, 9 கோடி தடுப்பூசிகளை முற்றிலும் இலவசமாக வழங்கி, மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்றியது பா.ஜ.க. தான். தமிழகத்தில் பொய் வாக்குறுதிகள் அளித்தே, மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.
தொலைநோக்கு திட்டங்கள் ஏதும் இல்லாமல், மக்களை கவரும் கவர்ச்சி திட்டங்களை வழங்கி வருவதால், தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. ஊழலின் ஊற்று கண்களாக தொடர்ந்து தி.மு.க. திகழ்கிறது. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர்.
ஆனால், எத்தனை காலத்திற்கு என்பதை தமிழக மக்கள் முடிவு செய்யும் நேரம் இது. எல்லாரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.
ஓட்டளிப்பது நம் உரிமை மட்டும் அல்ல, நம் கடமையும் தான் நல்லவர்கள் ஒரு ஓட்டு போட தவறினால், அது தவறான வேட்பாளர்களுக்கு வெற்றியையும், ஆதரவையும் தரும் நிலையை உருவாக்கி விடும். தேர்தலில் எளிய மக்கள் காட்டும் ஆர்வத்தை, அனைத்து தரப்பு மக்களும் பின்பற்ற வேண்டுகிறேன் என தெரிவித்து உள்ளார்.