“கேரள கவர்னரின் உரை சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல்” - டி.டி.வி.தினகரன்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-02-18 21:35 GMT
சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முல்லைப் பெரியாறு ஆற்றில் புதிய அணை கட்டப்போவதாக கவர்னர் உரையில் கேரள அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், “142 அடி வரை முல்லைப் பெரியாறில் தண்ணீர் தேக்குமளவிற்கு அணை வலுவாக இருப்பதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய நிலையில், அதனை ஏற்க மறுக்கும் வகையில் கேரள கவர்னர் உரையாற்றியிருப்பது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளாவில் நடப்பதால் முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் திறக்கும் தமிழகத்தின் 124 ஆண்டு கால உரிமையை சமீபத்தில் பறிகொடுத்ததைப் போல புதிய அணை கட்டவும் அனுமதித்துவிடக்கூடாது எனவும், இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்