ருமேனியாவைச் சேர்ந்தவர் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் - குடியுரிமை அலுவலகத்தில் விசாரணை

திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிகொய்டா, குடியுரிமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

Update: 2022-02-18 17:47 GMT
கோவை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, நேற்று தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு பெற்றன. இதற்காக வேட்பாளர்களை ஆதிகரித்து அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். 

இதற்கிடையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் நிகொய்டா என்பவர் தொழில் ரீதியாக கோவை மாவட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது தனது நண்பருடன் பேருந்தில் சென்ற அவர், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச டிக்கெட் வழங்கப்படுவதைக் கண்டார். இது குறித்து மேலும் தனது நண்பரிடம் கேட்டறிந்த நிகொய்டா, உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி நிகொய்டா திமுக கட்சியின் துண்டை அணிந்தவாறு, பொது மக்களிடம் திமுகவை ஆதரித்து நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் பரவின. அதே சமயம் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் விசாவில் வந்து அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்வது விசா விதிமுறை மீறல் என்றும் இது தொடர்பாக அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து குடியுரிமை அலுவலகத்தில் நிகொய்டா விசாரணைக்காக நேரில் ஆஜரானார். விதிமுறை மீறல் நடந்தது கண்டறியப்பட்டால் உடனடியாக நிகொய்டா அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதுடன், 3 ஆண்டுகள் அவர் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்