‘‘என்னை பா.ஜ.க.வின் இரண்டாம் அணி என்பதா?’’ சீமான் கொந்தளிப்பு
‘‘என்னை பா.ஜ.க.வின் இரண்டாம் அணி (பி டீம்) என்பதா?’’, என சீமான் கொந்தளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பணமும், பரிசு பொருட்களும்
வழக்கம்போல மக்களை நம்பி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 60-க்கும் மேற்பட்டோர் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டும், இன்னபிற நடவடிக்கைகள் மூலமாகவும் தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளனர். ஆளுங்கட்சியினரின் அராஜகம் அத்துமீறி போகிறது. பணமும், பரிசு பொருட்களும் கண்ணெதிரிலேயே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் 200 வார்டுகளும் நாம்தான் வரப்போகிறோம் என்று அமைச்சர்கள் ஆணவத்துடன் கூறுவதில் இருந்தே என்ன நடக்க போகிறது என்பதை யூகிக்க முடிகிறது. எங்களை சீண்டியது போல பா.ஜ.க. வேட்பாளர்களை அவர்கள் மிரட்ட முடியுமா?
தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அக்கிரமங்கள் அரங்கேறத்தான் செய்யும். பணம் இருப்பவர்கள் தான் அதிகாரத்துக்கு வரமுடியுமா? அப்படி என்றால் அது மக்களாட்சியாகவே இருக்கமுடியாது. இருள் சூழ்ந்த நாட்டில் எரிய தொடங்கும் சிறு சிறு நெருப்பையும் அணைத்துவிட துடிக்கிறார்கள்.
வாக்காளர்களுக்கு பணம் தரும் கலாசாரம் ஒழிந்தாலே நல்லாட்சி பிறக்கும். ஒரு நல்ல மாற்றத்துக்கான கட்சியாக நாம் தமிழர் கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இரண்டாம் அணியா?
எதற்கெடுத்தாலும் என்னை விமர்சிக்கிறார்கள். ‘சீமான் பா.ஜ.க.வின் இரண்டாம் அணி’ (‘பி டீம்’) என்கிறார்கள். ‘சீமானை ஜெயிக்கவிட்டால் பா.ஜ.க. உள்ளே வந்துடும்’, என்று தி.மு.க. அமைச்சர்கள் கூறுகிறார்கள்.
தீக்குச்சி எரியாமல் தீபம் பிரகாசிப்பது கிடையாது. தீக்குச்சிகளாக மாற நாங்கள் தயார். எனவே தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளை ஒதுக்கி எங்களுக்கு ஆதரவு தாருங்கள். எப்போதுமே தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம். ஆனால் உண்மையிலேயே ஒவ்வொரு முறையும் நாங்கள் தோற்கவில்லை. மக்களே தோற்றுபோகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.