சென்னை மாநகராட்சி வாக்குச்சாவடிகளில் உள்ள கேமரா பதிவுகளை பார்வையிட கண்காணிப்பு மையம்

சென்னை மாநகராட்சி வாக்குச்சாவடிகளில் உள்ள கேமரா பதிவுகளை பார்வையிட கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-02-17 21:01 GMT
5,794 வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கவுள்ள நிலையில், இதற்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் முடுக்கி விட்டுள்ளனர். வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பும் பணி நடந்தது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு மையம்

இந்த வாக்குச்சாவடிகளில் முறையாக வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய ஏதுவாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் புதிய கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

45 கம்ப்யூட்டர்கள் கொண்ட இந்த கண்காணிப்பு மையத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் எனவும், இந்த மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் நேரலையாக பார்வையிடப்படும் எனவும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறக்கும் படையினர்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள 45 தேர்தல் பறக்கும் படை வாகனத்தை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

69 வழக்குகள்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஏற்கனவே 45 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 45 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தற்போது முதல் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்த பறக்கும் படையினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம், பரிசுபொருட்கள் கொடுக்கிறார்களா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் 18004257012 என்ற இலவச தொலைபேசி எண்களில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே சென்னையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தனக்கு ஆதரவாக போஸ்டர்கள், ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். அதை அனுமதிக்க முடியாது. உயர்நீதிமன்றமும் வழிகாட்டுதல்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட வேட்பாளர்களிடம் அதை அகற்ற ஏற்பட்ட செலவீனத்தை பணமாக வசூலிக்கப்படும். மேலும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம். அந்த தொகை வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளில் சேர்க்கப்படும்.

18 ஆயிரம் போலீசார்

ஒரு வேட்பாளர் ரூ.90 ஆயிரத்துக்கும் மேல் தேர்தல் செலவு கணக்கில் வரும் போது அந்த வேட்பாளர்களை நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே வேட்பாளர்கள் போஸ்டர்கள், ஸ்டிக்கர் எதுவும் ஒட்டக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

தேர்தல் பிரசாரம் இன்று (நேற்று) மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை. தேர்தல் பணியில் 27 ஆயிரம் அதிகாரிகள், 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்