ஜிப்மர் மருத்துவமனையில் திடீர் தீ

ஜிப்மர் மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது வெளிப்புற நோயாளிகள், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்

Update: 2022-02-17 17:37 GMT
ஜிப்மர் மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது வெளிப்புற நோயாளிகள், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 
வெளிப்புற சிகிச்சை
புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா பரவல் காரணமாக சில வாரங்களுக்கு முன் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், கடந்த 7-ந் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி புதுவை, தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக         வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில்   ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் வெளிப்புற நோயாளிகள்       பிரிவில் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் குவிந்து இருந்தனர். கீழ்தளத்தில் சீட்டு பதியும் இடத்திலும், மேல் தளத்தில் சிகிச்சைக்காகவும் நோயாளிகள் காத்திருந்தனர்.
நோயாளிகள் ஓட்டம்
இந்தநிலையில் பழைய ரத்த வங்கி அலுவலக பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் அந்த பகுதியே புகை மண்டலமானது. இதைப்பார்த்ததும் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். சத்தம் கேட்டு     தரைத்தளத்தில் சிகிச்சைக்கு பதிவு செய்ய காத்திருந்த நோயாளிகளும் வெளியே ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருசில நோயாளிகள் காயமடைந்தனர். 
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மருத்துவமனை தீயணைப்பு அதிகாரிகளும், காவலர்களும் உடனே விரைந்து வந்து தீயணைப்பான் மூலம் தீயை அணைத்தனர். 
இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளிப்புற நோயாளிகளின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. அதன்பின் வெளிப்புற நோயாளிகளுக்கு மீண்டும் பதிவு தொடங்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து முண்டியடித்து கொண்டு நோயாளிகள் சிகிச்சை பெற காத்திருந்தனர்.
மின் கசிவு காரணம்
இந்த   தீவிபத்து  குறித்து தகவல் அறிந்து கோரிமேடு மற்றும் ஜிப்மர் புறக்காவல் நிலைய போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் அங்குள்ள மின்வயரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து     போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த தீவிபத்து காரணமாக ஜிப்மர்     மருத்துவமனை வளாகத்தில் சிறிது  நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்