வாக்குப்பதிவின் போது விதிமீறல் நடந்தால் புகார் அளிக்கலாம் - தேர்தல் ஆணையம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 16-ந் தேதி வரை இந்த புகார் மையத்தின் மூலம் வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு, சுவர் விளம்பரம், வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல், மாதிரி நடத்தை விதிகள், வேட்பு மனு தாக்கல், சின்னம் ஒதுக்கீடு, தேர்தல் விதிமீறல் என 670 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிமீறல் நடந்தால் 18004257072, 18004257073, 18004257074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம்.
மேற்கண்ட தகவல் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.