பூக்கடை தொழிலாளி கழுத்து அறுத்து கொலை
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் பூக்கடை தொழிலாளியை கழுத்து அறுத்து கொலை செய்த அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் பூக்கடை தொழிலாளியை கழுத்து அறுத்து கொலை செய்த அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூக்கடை தொழிலாளி
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு பெரியார் நகர் முதல் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் அருள் ஆனந்த் (வயது38). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் புதுச்சேரியில் தங்கி இருந்து பெரிய மார்க்கெட்டில் உள்ள காண்டீபன் என்பவரின் பூக்கடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பூக்கட்டும் வேலை செய்து வந்தார். இவரும் பூ மார்கெட்டில் வேலை செய்யும் வைத்திக்குப்பம் பாலாஜி (20), சாரம் சக்தி பாலா (22) ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள்.
வியாபாரத்தை முடித்துவிட்டு அவ்வப்போது இவர்கள் 3 பேரும் கடையில் அமர்ந்து மது அருந்துவது வாடிக்கை. அதுபோல் நேற்று இரவும் அருள் ஆனந்த், பாலாஜி, சக்தி பாலா ஆகியோர் மது வாங்கி வந்து பெரிய மார்க்கெட்டில் உள்ள காண்டீபன் பூக்கடையில் அமர்ந்து மதுகுடித்துள்ளனர்.
கழுத்தறுத்தனர்
அப்போது அவர்களுக்குள் பூத்தொடுப்பதில் யார் கைதேர்ந்தவர் என்பதில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியது. இந்தநிலையில் அருள் ஆனந்தை, பாலாஜி, சக்தி பாலா ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அருள் ஆனந்த் நிலைகுலைந்தார்.
அத்துடன் விட்டுவிடாமல் கடையில் பூ கட்டுவதற்காக வைத்திருந்த நார் கிழிக்க பயன்படுத்தப்படும் கத்தியை பாலாஜி, சக்தி பாலா ஆகியோர் எடுத்து வந்துள்ளனர். அதை வைத்து ஆத்திரத்தில் அருள் ஆனந்தின் கழுத்தை அறுத்து போட்டு விட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். சிறிது நேரத்தில் அருள் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கேமரா காட்சிகள் ஆய்வு
இதுதெரியாமல் வழக்கம் போல் அதிகாலை 3 மணி அளவில் பூ மார்க்கெட்டிற்கு வந்த காவலாளி ஒருவர் ரத்தவெள்ளத்தில் அருள் ஆனந்த் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் பெரியகடை போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருள் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததிலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததிலும் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தான் அருள் ஆனந்த் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
நண்பர்கள் கைது
இதைத்தொடர்ந்து பூக்கடை தொழிலாளியான அருள் ஆனந்தை கொலை செய்த அவரது நண்பர்களான பாலாஜி, சக்தி பாலா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
புதுவை பெரிய மார்க்கெட்டில் பூக்கடை தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.