ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்...!

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

Update: 2022-02-17 05:59 GMT
கோவை,

கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை கடந்த 14-ந் தேதி நள்ளிரவில் நடந்தது. 15-ந் தேதி காலை ஆழியாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை குண்டம் கட்டும் முறைதாரர்கள் குண்டம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
 
10 அடி அகலமும், 40 அடி நீளமும் உள்ள குண்டம் தயார் செய்யப்பட்டது. மாலை ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகளில் சித்திரை தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டது.

இன்று காலை குண்டம் பக்தர்கள் இறங்க தயார் செய்யப்பட்டது. குண்டம் இறங்க வரும் பக்தர்கள் ஆழியாற்றில் இறங்கி நீராடி, ஈர உடையுடன் ஆற்றங்கரையில் நின்றிருந்த அருளாளிகளிடம் குண்டம் இறங்க அனுமதி கேட்டனர். அருளாளிகள் திருநீர் கொடுத்து அனுமதி வழங்கியவுடன் குண்டம் இறங்கும் இடத்திற்கு சென்று வரிசையில் காத்து நின்றனர்.

குண்டத்தின் முன்பு சித்திரை தேரில் அம்மன் மலர் அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தந்தார். காலை 9 மணியளவில் அம்மன் அருளாளிகள் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தவுடன் வானில் கருடன் மூன்று முறை வட்டமிட்டது. அதற்கு பிறகு அருளாளிகள் மலர் உருண்டையை குண்டத்தில் உருட்டிவிட்டனர். அதுவாடாமல் இருந்தது. அதற்கு பிறகு எலுமிச்சை கனியை உருட்டி விட்டனர். அதுவும் வாடாமல் இருந்தது.

அதற்கு பிறகு அருளாளிகள் சித்திரை தேரில் இருந்த அம்மனை பார்த்து வணங்கியபடியே குண்டம் இறங்கினர். குண்டம் விழாவை பார்வையிட வந்த பக்தர்கள் மாசாணித்தாயே என பக்தி கோ‌ஷம் எழுப்பினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கியவுடன் பெண்கள் கைகளால் 3 முறை பூவை அள்ளி வீசி வணங்கினர். குண்டம் விழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்ததால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குண்டம் திருவிழாவை காண வந்த பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. இதுதவிர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆனைமலையில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்