சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நோக்கம் உண்மையில் உள்ளதா? அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

உண்மையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நோக்கம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளதா இல்லையா என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2022-02-17 01:23 GMT
சென்னை,

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சுகள் மாறுபட்ட தீர்ப்புகளை பிறப்பித்தன. அதையடுத்து இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முழு பெஞ்ச் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கடந்தமுறை இந்த வழக்கு விசாரணையின்போது, சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

அதையடுத்து தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு, கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன் ஆகியோர் ஆஜராகி, ‘தமிழ்நாடு முழுவதும் இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற மரங்களை வேருடன் அகற்றுவது தொடர்பான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது’ என்று கூறி, அதுதொடர்பான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அப்போது, இந்த சீமைக்கருவேல மரங்களை கிராம மக்கள் விறகுக்காக பயன்படுத்துகின்றனர். செங்கற்சூளைகள் போன்ற ஆலைகளுக்கும் இது எரிபொருளாக பயன்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

சீமைக்கருவேல மரங்களின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர்குழு, இந்த மரம் பசுமைக்காகவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் வளர்க்கப்படுவதாக அறிக்கை கொடுத்தது. இந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், பசுமைக்காகவும், வாழ்வாதாரம் தருவதாகவும் இருந்தால், இந்த மரங்களை அகற்ற அரசு ஏன் முடிவு எடுத்தது என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது, வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, ‘வனப்பகுதியில் இந்த மரங்கள் பிற மரங்களை வளரவிடுவதில்லை. யானைகள் போன்ற விலங்குகள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இந்த மரத்தால் பாதிப்பில்லை என கூற முடியாது’ என விளக்கம் அளித்தார்.

அதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், நிலத்துக்கு மலட்டுத்தன்மையும் ஏற்படுகிறது.

சீமைக்கருவேல மரங்களை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். உண்மையிலேயே இந்த மரங்களை அகற்றும் நோக்கம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளதா இல்லையா?

ராஜஸ்தான் போன்ற மற்ற மாநிலங்களில் இந்த மரங்களை அகற்ற என்ன நடைமுறை பின்பற்றுகின்றன என ஆய்வு செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் நடவடிக்கை இல்லை என்றால், தமிழ்நாடு முன்மாதிரியாக இந்த மரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். சீமைக்கருவேல மரங்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அதனால், தமிழ்நாடு அரசின் சொந்த நிதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற மார்ச் 16-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்