வேலூர்: சிறை கைதி உயிரிழப்பு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

வேலூர் சிறையில் இருந்த கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-02-16 05:13 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த நந்தினி( 26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நந்தினி தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார்.

நந்தினியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், நந்தினியின் கணவர் ராஜாமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில்  வேலூர் சிறையில் இருந்த ராஜாமணிக்கு இன்று காலை திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவரை சிகிச்சைக்காக
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதனை அறிந்த ராஜாமணியின் உறவினர்கள் ராஜாமணியின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மருத்துவமனை முன்பு  உள்ள வேலூர்- ஆரணி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தை நடத்தினர். சுமார் 30 நிமிடத்துக்கு மேல் நீடித்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது ராஜாமணி  சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்

இந்த போராட்டத்தால் அடுக்கம்பாறை அரசு மருத்துவனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்