தேர்தலுக்காக ரூ.1000 தருவதாக மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார்: அண்ணாமலை
தாய்மார்களின் கோபத்தை பார்த்து விட்டு தேர்தலுக்காக ரூ.1,000 தருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பொதுக்கூட்டம்
தஞ்சை மாநகராட்சியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மானம்புச்சாவடி பகுதியில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உள்ளாட்சிகளுக்கு ஒரு பைசா கூட மாநில அரசு ஒதுக்குவது இல்லை. மத்திய அரசுதான் நிதி ஒதுக்கி வருகிறது. விடியல் அரசு என்று சொல்லிக்கொள்ளும் அரசு ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும் யாருக்கும் விடியல் வரவில்லை. பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கினார்கள். 2 கோடியே 15 லட்சம் கரும்பு வாங்கப்பட்டது. ஒரு கரும்பில் மட்டும் விவசாயிகளிடம் இருந்து ரூ.15 கமிஷன் பெற்றுள்ளனர். கரும்பு வாங்கியதில் மட்டும் ரூ.33 கோடி ஊழல் நடந்துள்ளது.
தாய்மார்கள் கேள்வி
மஞ்சள் பை வாங்கியதில் ரூ.130 கோடி ஊழல் நடந்துள்ளது. இதை மறுத்து பேச ஸ்டாலினால் முடியுமா?. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை விட்டு வெளியே வராமல் காணொலிக்காட்சி மூலம் ஓட்டு கேட்கிறார். வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.1,000 எங்கே என தாய்மார்கள் கேள்வி கேட்கின்றனர்.
தாய்மார்களின் கோபத்தை பார்த்துவிட்டு தேர்தலுக்காக ரூ.1000 தருவதாக மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார்.
பொய்களே மூலதனம்
பொய்களைச் சொல்லி பொய்களை மட்டுமே மூலதனமாக கொண்டு செயல்படும் தி.மு.க.விற்கு மறந்து கூட ஓட்டு போட்டு விடாதீர்கள்.
காங்கிரஸ் கட்சி தமிழின விரோதிகள் உள்ள கட்சியாகும். மறந்து கூட காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப்போட்டு விடாதீர்கள். நாங்கள் மக்களின் அன்பை மட்டும் நம்பி களத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களை வெற்றிபெற செய்வது உங்கள் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.