போர் பதற்றம் நிலவுவதால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரஷியா கூறி வந்தாலும்கூட, உக்ரைனை சுற்றியுள்ள தமது எல்லையிலும், உக்ரைன் நாட்டில் ஆக்கிரமித்து வைத்துள்ள கிரிமியா பிராந்தியத்திலும் முப்படைகளையும் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் கூடுதலான படைகளையும், போர் விமானங்களையும் ரஷியா நிறுத்தி வைத்திருக்கிறது. எந்த நேரமும் போர் வெடிக்கும் ஆபத்து உள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட இருபதுக்கும் கூடுதலான நாடுகள், உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே, உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அவர்களாகவே அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுரை வழங்குவதுடன் நின்று விடாமல், இந்திய அரசே அவர்களை மீட்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் லிபியா மற்றும் ஆப்கானிஸ்தாலிருந்து இந்தியர்களை மீட்டது போல உக்ரைனில் உள்ள இந்தியர்களையும் இந்திய விமானப்படை விமானங்களை அனுப்பி மீட்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.