மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முற்றுகை - வீடியோ

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த கோரி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்கள் அமைப்பினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Update: 2022-02-15 10:57 GMT
புதுடெல்லி,

லாவண்யா தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசு நியாயமான முறையில் விசாரணை நடத்தக்கோரி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பைச்சேர்ந்தவர்களை கைது செய்த காவல்துறையினர். 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை துன்புறுத்தி வந்ததாக குறிப்பிடிருந்தார். இதனடிப்படையில், விடுதிக் காப்பாளரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. 

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் சென்னையில் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 

இந்த விவகாரத்தை கண்டித்தும், மாணவர் அமைப்பின் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரியும் வலியுறுத்தி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான டெல்லி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களை அதிரடியாக கைது செய்து தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.

 இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கடந்த முறை அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஏ.பி.வி.பி.க்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது இதனால்தான் இன்று முன்பாகவே மாணவர்களை கைது செய்து அழைத்துச்சென்றோம் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்