திமுகவில் இருந்து 51 பேர் தற்காலிக நீக்கம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுகவில் இருந்து 51 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்ளை எதிர்த்து போட்டியிடும் 51 பேர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக வேட்பாளர்களை எதிர்த்தும், கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்ட 51 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஒழுங்கு நடவடிக்கையில் வேலூர் மத்திய மாவட்டத்தில் வேலூர் மாநகர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், பொன்னாத்தூர் பகுதிகளில் எதிர் வேட்பாளர்களாக போட்டியிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் தஞ்சை வடக்கு மாவட்டம், கும்பகோணம், பட்டுகோட்டை, பாபநாசம், அய்யம்பேட்டை, திருவிடைமருதூர், நாகை தெற்கு, திருப்பூர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வேட்பாளர்கள் போட்டியிட்ட 51 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.