அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் பாடுபடுவேன்: சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் பாடுபடுவேன் என்று தலைமை நீதிபதி உறுதி அளித்து பேசினார்.
முனீஸ்வர்நாத் பண்டாரி
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக பணியாற்றிய முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக மாற்றப்பட்டார். அவர் சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதி என்பதால், பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் 22-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.
மு.க.ஸ்டாலின்
இதன்படி தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்று காலையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவி ஏற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரணியன், தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, ஐகோர்ட்டு நீதிபதிகள், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வாழ்த்து
நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்,
பின்னர் தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து அளித்து கவர்னர் வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, எதிர்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.
வரவேற்பு
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு 11.15 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதியை, வாழ்த்தி வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தலைவர் மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் கமலநாதன், பெண் வக்கீல் சங்கத்தின் தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் பேசினர்.
அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி பேசியதாவது:-
பிற மாநிலங்களைவிட நான் தமிழ்நாட்டைதான் அதிகம் நேசிக்கிறேன். பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றபோதும், தற்போது தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ளபோதும் வரவேற்பு விழா எனக்கு நடத்தப்படுகிறது. உண்மையில் 2 வரவேற்பு விழாக்கள் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
பாடுபடுவேன்
கடந்த 2 மாதங்களில் வழக்குகளை விரைவாக விசாரிக்க சக நீதிபதிகள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். நீண்டகாலமாக காலியாக உள்ள நீதித்துறை பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அதேபோல, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விரைவாக தீர்வு காண அனைத்து தரப்பினரும் எந்த ஒரு தடையுமின்றி என்னை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.
புகழும், பாரம்பரியமும் பெற்ற இந்த ஐகோர்ட்டு வளர்ச்சிக்கு என்னுடைய பங்களிப்பாக என்ன செய்ய முடியுமோ? அதை நிச்சயம் செய்வேன். அடிதட்டு மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.