இன்னும் 80 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சி வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்: அண்ணாமலை
மத்தியில் பா.ஜனதா ஆட்சி இன்னும் 80 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என திருப்பூரில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.
தி.மு.க. ஆட்சி மீது சலிப்பு
திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
திருப்பூர் செரங்காடு பகுதியில் அவர் பேசியதாவது:-
மத்தியில் 8 வருட பா.ஜனதா ஆட்சி இன்னும் 80 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது தி.மு.க.வின் 8 மாத ஆட்சியிலேயே மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் வழங்கினார்கள். அந்த பொருட்கள் யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்ற முறையில் வழங்கப்பட்டது. மஞ்சள் பை, கரும்பு வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.
கம்யூனிஸ்டு கட்சி
தமிழகத்தில் 2 கோடியே 64 லட்சம் பேர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். முதல் முறையாக தமிழக முதல்-அமைச்சர் வாக்கு சேகரிக்க வரவில்லை. மக்களை சந்திக்க பயந்து வரவில்லை என்று பா.ஜனதாவும் தொடர்ந்து கூறி வருகிறது. முதல்-அமைச்சர் ஓட்டு கேட்க வந்தால் நமது சகோதரிகள் அவரிடம் முதலில் ரூ.1,000 கொடுத்து விட்டு பேசுங்கள் என்பார்கள். 517 தேர்தல் வாக்குறுதியில் 7 வாக்குறுதியை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு களம் காண்கிறது. கம்யூனிஸ்டு கட்சி என்பது இந்தியாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட கட்சி. கேரளா, தமிழகத்தில் ஆங்காங்கே தஞ்சம் புகுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்டு என்பது ஐ.சி.யூ.வில் படுத்து தூங்கிக்கொண்டுள்ளது. அதற்கு ஆக்சிஜன் தி.மு.க. கொடுத்து வருகிறது. அந்த குழாயை உருவிவிட்டால் நோயாளி இறந்து விடுவார். கம்யூனிஸ்டு கட்சியின் சித்தாந்தம் என்பது அவர்களும் வாழக்கூடாது, மற்றவர்களும் வாழக்கூடாது என்பது தான். எந்த காலத்திலும் கம்யூனிஸ்டுக்கு ஓட்டு போட்டு உங்கள் வாக்கை பயன் இல்லாமல் செய்து விடாதீர்கள்.
40 ஆண்டுகள் பயன்பெற முடியும்
மாநில தி.மு.க. ஆட்சியால் அடுத்து 4 வருடத்துக்கு தேவையானதை செய்ய முடியும். ஆனால் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசால் அடுத்த 40 ஆண்டுக்கு தேவையானவற்றை செய்ய முடியும். பா.ஜனதாவுடன் மக்கள் சேர்ந்து இருந்தால் அடுத்த 40 ஆண்டுகள் பயன் பெற முடியும். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.