சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு அரிவாள் வெட்டு - நெல்லையில் பயங்கரம்
நெல்லை அருகே சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை
பாளைங்கோட்டை செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது 30). இவரது மனைவி செல்வி. கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
கணவனை பிரிந்த செல்வி கருங்குளத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டில் வாழ்ந்து வந்தார். கணவர் வீர மணிகண்டன் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்து உள்ளார். ஆனால் அவர் வரவில்லை என்று தெரிகிறது.
செல்வி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அங்கு வந்த வீரமணிகண்டன் பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த செல்வியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த கணவர் மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வியை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிவந்திப்பட்டி போலீசார், வீர மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.