முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப்.18 வரை கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு..!

முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் பிப்.18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.;

Update: 2022-02-14 08:57 GMT
கோப்புப்படம்
சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ந் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 27ஆம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 28ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் 30ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியே நடைபெற தொடங்கியது.

இந்த சூழலில் மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவ கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருந்தது. அதன்படி, மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டு, மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள், விடுதிகள் நடத்தப்பட உள்ளன.

மேலும் ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மாணவர்களின் கைரேகைகளை கண்டிப்பாக பெற கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31 ஆம் தேதிக்குள் கைரேகைகளை வழங்காத மாணவர்கள் வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 7.5 இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களிடம் கல்லூரிகளில் எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும், இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் பிப்.18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு அறிவித்துள்ளார். முன்னதாக,எம்பிபிஎஸ் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் பிப்.16 ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை பிப்.18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கையால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக  மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்