நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை நேரில் சந்திக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை நேரில் சந்திக்காதது ஏன்? என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

Update: 2022-02-14 00:01 GMT
கோவை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவை மாநகராட்சியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். கோவை ஆவாரம்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் முதன் முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தே காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்கிறார். அவர் ஏன் மக்களை நேரில் சந்திக்கவில்லை?

தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் பெண்களுக்கு தருவதாக கூறிய ரூ.1,000 எங்கே?, நகை கடன் தள்ளுபடி செய்யாதது ஏன்? என்று மக்கள் கேட்பார்கள். அதற்கு பயந்து கூட அவர் தேர்தல் பிரசாரத்துக்கு நேரில் வராமல் இருக்கலாம். அதனால் தான் யார்-யாரை எல்லாமோ பிரசாரத்துக்கு அனுப்பி உள்ளார்.

தமிழக அரசு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது. நகை கடன் தள்ளுபடி செய்யாததால் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். தேர்தல் அறிக்கையில் அளித்த 517 வாக்குறுதியில் முழுமையாக 7 வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாத, விடியாத அரசு இது.

5 நாட்களுக்கு முன்பு சென்னையில் பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் குண்டு போட்டனர். இது குறித்து போலீசார் விசாரித்தபோது, நீட் தேர்வுக்கு ஆதரவு அளித்ததால் குண்டு போட்டதாக தெரிவித்தனர். தற்போது, கூலிதொழிலாளி, விவசாயி மகள் என்று சாதாரண மக்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் அணுகுண்டே போட்டாலும் நீட் தேர்வை நாங்கள் ஆதரிப்போம்.

தனியார் மருத்துவ கல்லூரியிலும், அரசு மருத்துவ கல்லூரியிலும் ஒரே மாதிரியாக கட்டணம் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவை வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கோவை காமராஜர் புரத்தில் பிரசாரம் செய்த அண்ணாமலை அங்குள்ள இஸ்திரி கடைக்கு சென்று துணிகளுக்கு இஸ்திரி போட்டு ஓட்டு சேகரித்தார்.

மேலும் செய்திகள்