பெண்களுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தான் ஒரு வாக்குறுதி கொடுத்தால் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும், பெண்களுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்றும் தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
சென்னை,
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 825 பதவிகளிலும், தி.மு.க. வேட்பாளர்களும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களும்தான் வெற்றி பெற்றாக வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால்தான், அது முழுமையான வெற்றியாக, மகத்தான வெற்றியாக இருக்கும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், நம்முடைய மாநிலம் என்ன நிலைமைக்கு தள்ளப்பட்டது என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே தெரியும். உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க.வினர் வெற்றி பெற்று விடுவார்கள். அவ்வாறு வெற்றி பெற்று வந்தால், அ.தி.மு.க.வினருடைய ஊழல்களை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துவார்கள் என்று அஞ்சி நடுங்கி, உள்ளாட்சி தேர்தலையே நடத்தாமல் வைத்திருந்த ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி.
கவர்னர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 49 அறிவிப்புகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 75 சதவீதம் அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி, நிதிநிலை அறிக்கை, 110 விதிகள் என்று மொத்தம் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 75 சதவீதத்துக்கும் மேலான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இருந்து மீட்டு, விரைவில் மகளிர் உரிமைத் தொகையான மாதம் ரூ.1,000-ம் வழங்கப்போகிறோம். யாரையும் நாங்கள் ஏமாற்றப்போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான். இது தமிழ்நாட்டு தாய்மார்களான என்னோட சகோதரிகளுக்கு நன்றாக தெரியும். நான் காணொலியில் உங்களைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.
மக்களை சந்திப்பதை தவிர்ப்பதற்காக, நான் காணொலியில் பரப்புரை செய்வதாக, மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிலர் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய கற்பனை திறனை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. இந்த ஸ்டாலின் எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பவன்.
இவ்வாறு அவர் பேசினார்.